Skip to content

தடாதகை – சிறுகதை

December 14, 2007

இன்று இளவரசிக்கு சாந்தி முகூர்த்தம். பாண்டிய இளவரசி தடாதகை அம்மைக்கும் இமயத்து இளவரசன் விரூபாக்ஷனுக்கும் இரண்டு நாள் முன்புதான் திருமணம் முடிந்திருந்தது. அந்தபுரம் அலங்கரிக்கப்பட்டு அதுவே ஒரு தனி உலகமாக காட்சி அளித்தது. நடுநாயகமாக ரத்தின சிம்மாசனத்தில் கன்னங்கரிய நிறத்தில் வசீகரமான முகத்துடன் தடாதகை அம்மை வீற்றிருந்தாள். அவள் சிரிக்கும்போது வரிசையான பற்கள் தெரிய, எப்போதும் சிரித்துக்கொண்டே இருப்பாளோ எனும் படி முகம் மலர்ந்திருந்தது. அலங்கரிக்கப்பட்ட பல்லாக்கிலிருந்து அந்தப்புறத்து வாயிலில் வந்து இறங்கினான் விரூபாக்ஷன். தாதிப்பெண்கள் அவனை சூழ்ந்து வரவேற்று அந்தப்புறத்தினுள் அழைத்து வந்தார்கள்.

விரிந்து நீண்ட தலை முடியுடன் பொன்னிறத்தில் இருந்த விரூபாக்ஷ ராஜன், இளவரசி நேருக்கு நேர்வர மெல்ல சிரித்தான். நாணத்தினால் கருஞ்சிவப்பான தடாதகை அம்மை அவனுக்கு மாலையிட்டாள். கூடியிருந்த பெண்கள் வாழ்த்தொலிகள் எழுப்பினர். இருவரையும் அலங்கரிக்கப்பட்ட பெரிய அறைக்கு வழிநடத்தினார்கள். மணமக்கள் அறைக்குள் செல்ல பெண்கள் வெளியிலேயே தயங்கி தங்கினர். பகையரசனாக வந்தவன் தங்கள் அரசியை மணந்து தங்களுக்கும் அரசனானதை எண்ணிய வியப்பு அவர்களுக்கு இன்னும் அடங்கவில்லை. கடந்த நாட்களில் நடந்தவற்றை நினைத்து இப்படியும் நடக்குமா என்ற ஆச்சரியம் இன்னும் இவர்கள் மட்டுமல்ல.. அந்த தேசத்து மக்களிடமே அடங்கவில்லை.

பெரிய அரசர் தன் வயோதிகத்தாலும், வேறு வாரிசுகள் இல்லாமல் போனதாலும், தடாதகை அம்மையையே பட்டத்து இளவரசியாக முடிசூட்டினார். திருமணமாகாத பெண்ணை அரசியாக்குவதா என்று பங்காளிகளிடமிருந்து கடும் எதிர்ப்பு எழுந்தது. சீறி கிளம்பிய பெண் சிறுத்தையை போல, வாளேந்தி அரசவைக்குள் நுழைந்த தடாதகை அம்மை, உரத்த குரலெழுப்பி தன் எதிரிகளை சண்டைக்கு அழைத்தாள். “என்னை எதிர்ப்போர் தலைகள் மீது நான் கால் பதித்ததாகட்டும்! நான் மற்ற பெண்களை போலல்ல… இயற்கையிலேயே மாறுபட்டவள்…” என்று அவள் எழுப்பிய கர்ஜனைக்கு பலர் பின்வாங்கினர். துணிந்த ஒரு சிலர், அவள் வாளுக்கு இரையாயினர்.

ஆம், அவள் மற்ற பெண்டிரைப்போல இல்லாமல், மூன்று மார்பகங்களுடன் இயற்கையை மீறிய சக்தியாய் இருந்தாள். அவள் போர்கலையில் அந்த தேசத்திலேயே சிறந்து விளங்கினாள். பெரும் வீரர்களெல்லாம் அவள் வாளுக்கு முன் அஞ்சி அவள் மேல் அளவற்ற மரியாதை கொண்டு பணிந்தார்கள். அவள் மற்ற பெண்களிடமிருந்து விலகியே இருந்தாள். ஆரம்பத்தில் அவளது எதிர்காலத்தை நினைத்து கவலை கொண்ட பெரிய அரசர், ராஜ குருமார்கள் எல்லோரும் ஒருமித்த குரலில் அவள் உலகாள பிறந்தவள், தோல்வி என்பதே அவளுக்கு இல்லை என்று அறுதியிட்டு உறுதி கூறவும் அரசர் கவலை படுவதை நிறுத்திக்கொண்டார்.

இந்த வருடத்துடன் அரசர் தன் அரசாட்சியை முழுப்பொறுப்பையும் தடாதகை அம்மையிடம் ஒப்புவிக்க, அவளுடைய ஆட்சியின் தொடக்கமாக வெற்றி பெருவிழாவை கொண்டாடினார்கள். அந்த சமயம் பார்த்து இமயத்து அடிவார தேசமொன்றிலிருந்து விரூபாக்ஷன் படையெடுத்து வந்தான். அவன் மனித சக்தியே இல்லை என்னும் படியாக லட்சக்கணக்கான வீரர்களுடன் சென்ற இடங்களிலெல்லாம் வெற்றியே கொண்டு தென்னகம் வந்து சேர்ந்தான். அப்போதுதான் அரசப் பொறுப்பேற்ற தடாதகை அம்மை போருக்கு ஆயத்தமானாள். பதினோரு நாட்கள் நடந்த போரில், கடைசி நாள் விரூபாக்ஷனை தனியே எதிர்கொண்டாள்.

விரூபாக்ஷனை நேரில் கண்டபோதுதான் புரிந்தது. அவன் விரூப – அக்ஷன், சாதாரண ஆண்மகனைப்போல் அவனுக்கு இரண்டு பதிலாக மூன்று கண்கள்! அதிமானுடனாக இருந்தான். இருவரும் துவந்த யுத்தம் புரிய துவங்க இவர்களது போர்த்திறனை சூழ்ந்திருந்த படைகள் தமது செயலை நிறுத்தி கவனிக்க தொடங்கினர். முடிவே இல்லையோ எனும்படி நடந்த போர் மாலையில் சூரியன் மறையும் வரை நடந்தது. உடலெங்கும் ரத்தம் சிவந்த மலர்களாக பூத்திருக்க இருவரும் விலகி தத்தமது பாசறைக்கு திரும்பினர். அன்றிரவு, யாருக்கும் பணியாத விரூபாக்ஷன் தனது நிலையை தளர்த்தி சமாதான தூது அனுப்பினான். சமாதானம் சமரசமாகி திருமணமாக நிச்சயமாகி விமரிசையாக திருமணம் நடந்து முடிந்தது.

இதையெல்லாம் கண்முன் கனவுபோல நினைத்து மகிழ்ந்த விரூபாக்ஷ ராஜன் தடாதகை அம்மையின் முகத்தை அன்பாக தொட்டு நிமிர்த்தி மெதுவாக சொன்னான் – “தடாதகை, என்னைப்பற்றி நீ எல்லாவற்றையும் தெரிந்து கொள்ள வேண்டும்… நான் மனிதனே அல்ல…” என்றான். தடாதகை துணுக்குற்று விலகினாள். “நான் ஆல்பா செண்டூரியை சேர்ந்தவன்… எங்கள் ஆட்கள் நிறைய பேர் இங்கே வந்து பூமியில் பல இடங்களில் இறங்கி இருக்கிறார்கள். நான் வேற்று கிரகத்தை சேர்ந்தவன் என்பது உனக்கு அதிர்ச்சியாக இருக்கும்… ஆனால் பயப்படாதே!” என்று சொல்லிக்கொண்டே திரும்ப, தடாதகை கடகட வென சிரித்து தன் மூன்றாவது மார்பகமாக இருந்த எனர்ஜி கன்வர்டரை கழற்றி கையில் பிடித்துக் கொண்டிருந்தாள்…

(இது நச் போட்டிக்காக எழுதப்பட்டது.)

9 Comments leave one →
 1. December 15, 2007 4:05 am

  நல்லா இருக்குங்க. நம்ம மதுரையரசி கதையாச்சேன்னு படிச்சுக்கிட்டு வந்தேன். எப்படி முடிக்கப் போறீங்கன்னு பார்த்துக்கிட்டு இருந்தேன்.

  ஆல்பா செண்டூரி ஆளைப் பார்த்த உடனே நம்மாளு எனர்ஜி பேக் காணாமப் போயிருக்கணுமே. 🙂

 2. December 15, 2007 9:24 am

  Welcome Free-mason sir 🙂
  ரொம்ப பொறுமையாக படித்ததற்கு நன்றிகள் பல 🙂

 3. Rajesh permalink
  December 15, 2007 9:52 pm

  Science fiction? ethir parkavillai… nalla irukku.

 4. parithimalan permalink
  December 16, 2007 8:44 am

  கனவுகள் காண்பதிலும் அப்படியே நடந்தது போல் வர்ணிப்பதிலும்
  சும்மா சொல்லக்கூடாது, ஜீவாவை மிஞ்சிவிட்டீர்கள்.

 5. December 16, 2007 1:15 pm

  sariththirakkathai pola arampiththu science fiction kathaiyaaka mutinthathu. vaazththukkaL !
  KAMALA

 6. December 16, 2007 4:59 pm

  சரித்திரம் + அறிவியல்…நல்ல கலக்கல்..கதை நன்றாக உள்ளது..

 7. December 17, 2007 3:25 am

  @Rajesh: Thanks… you didn’t expect?

  @Parithimalan: Welcome, அது யாருங்க ஜீவா?

  @Kalyanakamala: Welcome madam, தங்கள் வாழ்த்துக்கு நன்றி 🙂

  @பாச மலர்: கதையை பாராட்டியதற்கு நன்றி.. இதில் என் எண்ணம் எள் முனை அளவுதான். மதுரை மீனாட்சியின் கதையை நினைத்து எழுதியதுதான் முழுவதும்… 🙂

 8. December 18, 2007 5:11 am

  நல்லா இருந்திச்சு….மதுரை தடாதகை சிவபெருமான் இப்படி ஆவாங்கன்னு நான் எதிர்ப்பார்க்கவேயில்லை….

 9. Nithya permalink
  December 30, 2007 11:21 am

  நன்றாக கொண்டு போய் எதிர்பாராத திருப்பம் தந்திருக்கிறீர்கள்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: