Skip to content

Thriller – ‘Starudan Oru Naal’ story

December 12, 2007

கண்ணுக்குள்ளே கத்தி ரெண்டு நெத்தியிலே ஒத்தப்பொட்டு
சுத்தி நின்ன ஊரைவிட்டு தேடி வந்தவளே
நீ பயங்காட்டும் நடுராத்திரி உருவம்
உன் நெத்தியிலே அடங்குது என் கர்வம்

இதே வரிகளை திரும்ப திரும்ப கர்ம சிரத்தையாக ஒலிபெருக்கி ஒன்று சொல்லிக்கொண்டிருக்க இளஞ்சூரியனின் பின்னணியில் ஐம்பது அறுபது பேர் ஒரே மாதிரி கட்டிபிடித்து உருண்டு எழுந்திருக்க நடுவில் ஸ்பெஷல் லைட்டிங்கில் விஷாலும் மெர்லினும் தெரிந்தார்கள். காலைப்பொழுது மழலைமை நீங்கி விடலைமைக்கு நெருங்குவது போல் வெயிற்சூடு ஏறிக்கொண்டிருந்தது. சிறிது நேரத்தில் அலுத்துப்போன மாதிரி நெற்றி வியர்வையை துடைத்துக்கொண்டு வந்த மெர்லினுக்கு வயது இருபத்தி ஏழென்று சொன்னால் நம்பமாட்டீர்கள்.

“மேடம் இந்த பாட்டோட ஸ்டில்ஸெல்லாம் கூட நல்லா வந்திருக்கு” என்ற படி ஆல்பத்தை நீட்டிய வைத்தி மெர்லினின் மானேஜர். “வைச்சுக்கோங்க அப்றம் மொத்தமா பாத்துக்கறேன்.” என்று புறந்தள்ளிய மெர்லின் ஆயாசமாக நாற்காலியில் சாய்ந்தாள். அங்கே க்ளிப் போட்ட பேடில் இருந்த பாடல் வரிகளை ஒரு நோட்டம் விட்டு “யாரு இந்த பாட்டுக்கு ஐடியா கொடுத்தது… பத்து பதினைந்து நாளா எடுத்தும் பாட்டுல நாலு வரி கூட எடுத்து முடிச்ச மாதிரி தெரியலையே..” என்றாள். “இப்ப வரைக்கும் கால் வாசிதான் முடிஞ்சுருக்கு.. இந்த பாட்டுக்கும் கடைசி சீனுக்குமா சேர்த்து அடுத்த மாதம் நியூசிலாந்து ஷ¤ட்டிங் வேற இருக்கே…” என்றான் வைத்தி.

“இந்த பாட்டு யாரு எழுதினது… புதுசா யாரோன்னு சொன்னாங்களே…” என்றாள். “இதுவும் வடுகநாதன் எழுதினது தான், என்ன மேடம் திடீர்னு.. ” என்றான். “ஒரு பாட்டுக்கூட தேறும்னு தோணலை, பாட்டெல்லாம் பேத்தல் மாதிரி இருக்கு” என்றாள். “மேடம் அப்படி சொல்ல முடியாது ஒரு வேடிக்கைக்கு வேணுன்னா சொல்றேன், இப்ப எடுத்தாங்களே இந்த பாட்டு வரி திருக்குறள்லே கூட இருக்கு – ஒள் நுதற்கு ஓ உடைந்ததே ஞாட்பினுள் நண்ணாரும் உட்கும் என் பீடு – ன்னு ஒரு குறள் சாயல்லே இருக்குது இந்த பாட்டு” என்ற வைத்தியை பிறை சந்திரனைப்போல் ஒரு சிரிப்பு சிரித்து குறிச்சு வைச்சுக்கோங்க – பேட்டியில சொல்லணும் என்று விட்டு மறுபடியும் சென்று ஜோதியில் ஐக்கியமானாள்.

* – * – *

“பாப்பி மதியம் ஒரு மணிக்கு வீட்டுக்கு வந்துடு பேசணும்” என்று விட்டு போனை காரின் பின் சீட்டிலிருந்த வைத்தியிடம் எறிந்து விட்டு பேப்பரை எடுத்து வைத்து படிக்க துவங்கினாள். “மேடம் சோமசுந்தரம் பத்து மணிக்கு வருவார். பணம் ரெடியா இருக்கு… முடிச்சிடலாம்” என்றவனை நிமிர்ந்து பார்க்காமல் “வேண்டாம் ப்ளான் மாறிடுச்சு… நான் பணம் கொண்டு வரசொன்னது வேற காரியத்துக்கு. அந்த ஆள் வந்தா இப்ப பாக்க முடியாது. அவசரப்படாம நாளைக்கு வந்து பார்க்கச்சொல்லு…  மணியை வரச்சொன்னேனே என்னாச்சு” என்றாள். “மணி வந்தாச்சு வீட்லதான் வெய்ட் பண்ணிட்டு இருக்கான்” என்றான். “மேடம் அந்த ஆளு அவசரப்படறான்… அதுக்காக மணியைக் கூப்பிட்டு…” என்று இழுத்த வைத்தியை “வைத்தி இதிலெல்லாம் பாவபுண்ணியம் பாக்ககூடாது – உடனே போட்டு தள்ளணும்… மணி வேலையை முடிச்சதும் போட்டோசை ரெண்டு நாள் கழிச்சு ரிகவர் பண்ணிடலாம் இது எல்லாருமே பண்றதுதான் – ரொம்ப கவலைப்படாதீங்க.. ” என்று அவனை ஊடுறுவி ஒரு பார்வை பார்த்துவிட்டு மறுபடியும் பேப்பரில் ஆழ்ந்தாள்.

* – * – *

வீட்டு வாசலில் விசுவாசமான நாய்க்குட்டி போல நின்றிருந்த மணி ஆறடி இரண்டங்குல உயரத்தில் முகத்தில் ஆறு நாள் தாடியுடன் இருந்தான்.  அவனை விலக்கி பின்னால் நடுத்தர வயது கடந்து நின்று கொண்டிருந்தவரைப்பார்த்து சிரித்து “வைத்தி மணியை மேலே மாடில வெய்ட் பண்ண சொல்லு… நான் இவரோட பேசிட்டு வரேன் ” என்று வைத்தியை மணியுடன் அனுப்பினாள். பிறகு அவரிடம் “சொக்கலிங்கம்.. நீங்க சொன்ன மாதிரி இரண்டு லட்சத்தி சில்லரை ரெடி… கும்பாபிஷேகம் நல்ல படியா நடக்கணும் அவ்வளவுதான்… இன்னும் வேணும்னாலும் கேளுங்க என்று சொன்னபடியே வீட்டினுள் நுழைந்து முதல் அறையிலேயே இருந்த ஒரு லெதர் பாகை கொண்டு வந்து அதிலிருந்து ஒரு செக்கை எடுத்து நீட்டினாள். வாங்கிக்கொண்ட  சொக்கலிங்கம் “ரொம்ப சந்தோஷம்மா… இன்னும் இரண்டொருநாள்ல வேலை ஆரம்பிச்சுடும்” என்று சொன்னார். “காபி சாப்டுட்டு போங்க… ” என்று அவர் பதிலுக்கு காத்திராமல் மேல் மாடிக்கு படியேறினவளை “அம்மா…” என்று அழைத்து நிறுத்தினார்.  என்ன என்பதுபோல் பார்த்தவளிடம் “ராஜிக்கு இப்போ ரொம்பவே உடம்பு தேவலை… நேத்து பாத்து பேசினேன். அடுத்த வருஷம் நம்ப ஸ்கூல்லயே சேரணும்னு சொன்னா” என்றார்.

“எந்த ராஜி? ” என்றாள். “அதாம்மா ராஜலட்சுமின்னு நம்ப ஸ்கூல்ல படிக்குதே… அதோட ஆபரேஷனுக்கு கூட நீங்க பணம் கொடுத்தீங்க… ஆபரேஷன் நல்லபடிக்கு முடிஞ்சு ஒரு மாதம் ஆயிடுத்து…” என்று அவர் சொல்லும் போது லேசாக நெற்றியில் தட்டிக்கொண்டு “ஆமாமா.. மறந்து போயிட்டேன்…” நான் கூட ஒருதடவை அந்த குழந்தையை பார்த்துட்டு வரணும்னு இருக்கேன். சாயங்காலமா போன் பண்ணி ஞாபகப்படுத்துங்க..” என்றாள். “சரிம்மா… அப்படியே நம்ப ஸ்கூலுக்கும் நீங்க இந்த வாரம் முழுக்க வரவேயில்லை” என்று குறைப்பட்டுக்கொண்டார். “அதான் இந்த மாதிரி நல்ல விஷயத்துக்கெல்லாம் நீங்க இருக்கீங்களே… இந்த மாசத்திலிருந்து உங்க சம்பளத்துல மூவாயிரம் அதிகமா எடுத்துக்குங்க” என்றாள். சொக்கலிங்கம் பதில் சொல்லாமல் சிரித்தார். மெர்லின் மாடிப்படியேறி மறைந்தாள்.

* – * – *

“மணி… நான் சொல்றதை குறுக்க பேசாம கேளு… ஆள் பேரு சோமசுந்தரம்… எனக்கு பயந்து இப்போ மெட்ராஸ்ல ஒரு ஹோட்டல்ல ஒளிஞ்சிட்டு இருக்கான். சாம தான பேத தண்டம் எல்லாம் பாத்தாச்சி சரிப்பட்டு வரலை. அதான் உன்னைக்கூப்பிட்டேன். இன்னிக்கி சாயந்திரத்துக்குள்ள வேலையை முடிக்கணும். ஆளை தீர்த்துராதே… வேற என்ன வேணுன்னா பண்ணு – பணம் வைத்தீட்ட வாங்கிக்கோ” என்று வைத்தியைப்பார்த்தாள். தலையாட்டிய வைத்தி மணியை அழைத்துக்கொண்டு கீழ்தளத்துக்கு போனான்.

அவர்கள் போகிறார்களா என்று பார்த்துவிட்டு சோபாவில் சரிந்து சற்று நேரம் சுற்றுகிற ·பேனையே உறுத்து பார்த்தாள்.

பிறகு நினைத்துக்கொண்டார்போல போனை எடுத்து டயலை சுழற்றி காத்திருந்தாள். “பாப்பி நாந்தான். ஆள் யாருன்னு கண்டுபிடிச்சு க்ளீன் பண்ண சொல்லியாச்சு. உன் போட்டோசெல்லாம் வந்துடும். கவலைப்படாதே.. அழறதை நிறுத்து… அந்த பயலோட ஊர்சுத்தாதேன்னு தலைப்பாடா அடிச்சுகிட்டேன். நீ கேட்கலை. இப்போ வருத்தப்பட்டு ஒண்ணும் ஆகப்போகிறதில்லை. நான் பாத்துக்கறேன் கவலைப்படாதே…” என்று அந்த நிமிடத்திலிருந்து அரைமணி நேரம் பேசினாள்.

* – * – *

ஒரே ஒரு இட்டிலியை காலையில் வீட்டில் உண்ட நினைவுடன் இங்கே ஸ்டார் ஹோட்டலில் பனானா தோசா என்று வடையை விட சற்று பெரிதாக இருந்த வஸ்துவை நிமிண்டிக்கொண்டே “சொல்லுங்க… ” என்று சொன்ன மெர்லின் காலையில் பார்த்ததைவிட சுறுசுறுப்பாகியிருந்தாள். அருகில் ஒல்லியாக கச்சலான திரேகத்துடன் சுற்றுமுற்றும் நடப்பவர்களை பார்த்துக்கொண்டே பேசிய இளைஞன் புது டைரக்டர். “மேடம் இது வித்தியாசமான கதை மேடம்… ” என்று ஆரம்பித்த போது “அட போங்கடா” என்பது போல் பார்த்தாள்.

“இது ஒரு ஹீரோயின் பேஸ்டு சப்ஜெக்டு… இந்த படம் நல்லா வரும் மேடம் கேளுங்க… ஒன்லைனா சொன்னா தன் அப்பாவை அவமானப்படுத்திய ஹீரோவை ஹீரோயின் காதலிச்சு கல்யாணம் பண்ணி பழிவாங்கறா… ” என்று ஆரம்பித்த டைரக்டர் நன்றாக உட்கார்ந்து கொண்டு சொல்ல ஆரம்பித்தான். கதையை விட அவன் அங்க அசைவுகளையும் ஆர்வத்தையும் முக பாவங்களையும் சற்றே ரசித்து கேட்க ஆரம்பித்தாள்.

சரியாக நாற்பத்தி ஐந்தாவது நிமிடத்தில் வைத்தி வந்து மேடம் பூஜைக்கு நேரமாச்சு என்று சொல்லிக்கொண்டே வர, “ம்… இன்னிக்கி இது போதும்… நாளைக்கு ராத்திரி எட்டு மணிக்கு நம்ப வீட்டுக்கு வந்துடுங்க… மிச்சத்தை அப்போ பேசிக்கலாம் ” என்று சொல்லி நகர்ந்தாள்.

சாலையில் செல்லும்போது காருக்குள், வைத்தி “இந்த ஆள் நல்லா சுறுசுறுப்பா இருக்கான். இந்த படம் பண்ணினா நல்லா வரும்னு தோணுது. ” என்றான். “படம் நல்லா வரலைன்னாலும் பரவாயில்லை. எனக்கு பத்தோட பதினொண்ணு. படத்தோட புரொடியூசர் செட்டியார்க்குதான் அடி. ஆரம்பத்தில செட்டியார் அக்ரிமெண்டைக்காட்டி என்னை நிறைய ஏமாத்தியிருக்கார். சந்தர்ப்பத்தை எதிர்பாத்திட்டு இருக்கேன். பார்ப்போம். ஆனா அந்தாளுக்குதான் இந்த மாதிரி டைரக்டரெல்லாம் கிடைக்கறான். செட்டியார் வாழறான்” என்றாள்.

* – * – *

“மேடம் ப்ளைட்டுக்கு நேரமாயிடுச்சு… எல்லாம் ரெடியாயிருக்கு… நீங்க இன்னும் கிளம்பலியே…” என்ற வைத்தியைப்பார்த்து “பாப்பியை வர சொல்லியிருக்கேன்… இன்னும் காணோம்… நாம ப்ளைட்டை கான்சல் பண்ணவும் முடியாது. போய்ட்டு நாளைக்கு மதியானம் வரப்போறோம்… அதான் பார்க்கறேன். ” என்றாள் கவலையுடன்.

“பாப்பிம்மா… இந்த வீட்டுக்குதான் வரதேயில்ல… தனியாவே தங்கியிருக்காங்க… நம்பளோட இருந்தாலாவது கொஞ்சம் ஆறுதலா இருக்கும்” என்ற வைத்தியின் பதிலில் நிஜமான அக்கரை இருந்தது.

“இந்த பாவி சோமசுந்தரம் அவளொட பழகி இப்போ போட்டோ எடுத்து மிரட்டர வரைக்கும் நடக்கலைன்னா எப்படியோ இருக்கவேண்டிய பொண்ணு. என்னைப்போலவே ஆகணும்னு விடாப்பிடியா இருந்தா. நான் வேணாம்னு சொன்னா பொறாமைப்படறதா எடுத்துகிட்டா… இப்போ அவளுக்காக நாம எது செய்யறதா இருந்தாலும் ஒட்ட மாட்டேங்குது. சின்ன குழந்தையிலேர்ந்து நான் தூக்கி வளர்த்த பொண்ணு” என்றாள் லேசான கண்ணீருடன்.

* – * – *

மாலையில் புறப்பட்ட விமானத்தில் வைத்தியும் கவலை முகத்தில் தெரியாமல் பண்ணிக்கொண்டிருந்த மெர்லினும். “மேடம், இப்போ போய் இறங்கின உடனே புறப்படறதுக்கு வண்டி ரெடியா இருக்கும். விடிகாலை வரை போகும்னு எதிர்பார்க்கறேன். அதனால இப்போ கொஞ்சம் தூங்குங்க. நான் பாப்பிம்மாவை காண்டாக்ட் பண்ணி உங்களுக்கு சொல்றேன். கவலைப்படாமல் தூங்குங்க…” என்றான் வைத்தி.

“தூக்கம் வராது வைத்தி… ” என்று சிரித்த மெர்லினின் முகத்தில் கவலையின் சாயை சற்றும் வெளியே தெரியவே இல்லை. கைப்பைக்குள் கையை நுழைத்து டா வின்சி கோட் எடுத்து வாசிக்க துவங்கினாள்.

* – * – *

ஏர்போர்ட்டில் “வைத்தி நேரா ஸ்பாட்டுக்கு போக வேண்டாம். சேட் வீட்டுக்கு போலாம். பேசி அவரோட செட்டில்மெண்ட் ஒத்துக்கறதா சொல்லி முடிச்சுடலாம். ” என்றாள். வைத்தி, “மேடம் இப்போ சேட்டோட செட்டில்மெண்ட் ஒத்துக்கிட்டா நமக்குதான் கஷ்டம். அந்த ஆள் கோர்ட்டுக்கு போகட்டும்னு – போனாலும் நமக்கு பப்ளிசிட்டிதான்னு நீங்கதானே சொன்னீங்க…” என்று புரியாமல் பார்த்தான்.

“சேட்டுக்கு மூணு பொண்ணுல்ல… பாவம் எனக்கென்னவோ இப்போ அவரோட செட்டில்மெண்ட் பண்ணிக்கணும்னு தோணுது. என்ன இருந்தாலும் அவரோட பணம். மெட்ராஸ் வந்து படம் எடுக்கறேன்னு அட்வான்ஸ் கொடுத்து மாட்டிக்கிட்டார். கொஞ்சம் அடாவடி பண்ணாம இருந்திருந்தா படம் எடுத்தே முடிச்சிருக்கலாம்… விஷாலை பகைச்சுட்டதால வினையாயிடுச்சு… நாமும் வாங்கின அட்வான்சை தராம விட வேண்டியதாயிடுச்சு… வேற யாராவதா இருந்தா இது மாதிரி பணம் இருக்கேன்னு எத வேணுன்னா படமா எடுக்கலாம்னு வரவங்களை தூக்கி எறிஞ்சுட்டு போயிட்டே இருக்கலாம்… இந்த ஆளு பாவம் – அவன் பொண்டாட்டி வந்து அழுதுட்டு போச்சில்ல…” என்றாள்.

வாயெல்லாம் பல்லாக சேட் வழியனுப்ப வைத்தியுடன்  ஷ¤ட்டிங்க் ஸ்பாட்டுக்கு விரைந்தார்கள்.

* – * – *

பின்னிரவில் கொஞ்சமும் களைப்பு முகத்தில் தெரியாமல் அப்போதுதான் கணவனுடன் சிணுங்கி விட்டு வந்து நாற்காலியில் உட்காரப்போன மெர்லினிடம் காதோடு ரகசியமாக.. “மேடம்… மணி போன காரியம் நடக்கலை… சோமசுந்தரம் தப்பிச்சு பாப்பிம்மாவைப்போய் பார்த்து மிரட்டியிருக்கான். சாயந்திரம் பாப்பிம்மா… பாப்பிம்மா.. ” என்று லேசாக அழ ஆரம்பித்தான்.

ஒரு நிமிடம் இறுக்கமான மெர்லின் ” விடுங்க… நான் எதிர்பார்த்தது நடந்து போச்சு… நான் பார்த்துக்கறேன் அவசரப்படாதேன்னு சொன்னேன்… இப்போ க்ளைமாக்ஸ் கடைசி ஷாட்டை  நிறுத்திட்டு போனா மறுபடி ஷ¤ட்டிங்க் தொடர பதினைந்து நாளாவது ஆகும்.. பெரிய நஷ்டம் எல்லாருக்கும்… விடிஞ்சதும் போய் பார்த்துக்கலாம்… அழுகையை நிறுத்துங்க… பேசாம இருங்க… ” என்று தொப்பென்று சேரில் சரிந்தாள்.

சில நிமிட மெளனத்திற்கு பிறகு “ஷாட் ரெடி ” என்று குரல் வரவே எழுந்து ஐம்பது அறுபது பேருக்கு நடுவே பகலைவிட அதிகமான வெளிச்சத்தில் கணவனுடன் ஊடல் கொண்ட பெண்ணாய் நாணத்துடன் சிரித்து பேசப்போனாள்.

Advertisements
No comments yet

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: