Applying management techniques to life
அக்டோபர் 2, 2007 ஆல் Srikanth
சிந்தனையை கட்டுப்படுத்துதல் (emotional management), தெளிவான பேச்சு (communication), காலந்தவறாமை (time-management), தலைமைப் பண்புகள் (leadership), மன உளைச்சலை சமாளித்தல் (stress management), சமரசம் செய்யும் திறமை (negotiating skills), சமூகப் பழக்கவழக்கங்களை உணர்ந்து நடத்தல் (social etiquette) என்று இவைகள் ஏதோ ஒரு கம்பெனி மேலாளருக்குரியவை, எல்லோருக்கும் அல்ல என்று நினைத்து விடாதீர்கள்.
இன்றைக்குள்ள சூழ்நிலையில் நம் எல்லோருக்குமே சிறார்களிலிருந்து, வயதானவர்கள் வரை தேவைப்படுகிறது. இந்த தொடரில் இவற்றை சற்று சுருக்கமாக பார்ப்போம்.
***
காலையில் வெளியே அவசரமாக கிளம்புகிறீர்கள் - உங்கள் வீட்டு சிறுவன் ஓடிவந்து பக்கத்தில் வைத்திருந்த காபியை உங்கள்மேல் தட்டி விட்டு விடுகிறான்.
சாதாரண எதிர்வினையாக உடனே நீங்கள் குழந்தையை திட்டி, காபி கொண்டு வந்து அஜாக்கிரதையாக வைத்துவிட்டு போனதற்காக மனைவியிடமோ, வேறொருவரிடமோ கோபித்து, அதே வேகத்தில் வெளியே கிளம்பி, எதையாவது மறந்துபோய் ஏகப்பட்ட குழப்பங்களுக்கு ஆளாகிப்போக நேரிடும்.
இங்கேதான் சிந்தனையைக் கட்டுப்படுத்த வேண்டும். காலம் மாறிவிட்டது. நாமெல்லாம் ஒருநாளில் ஐம்பது மணிநேரத்துக்குரிய வேலையை பத்து பனிரெண்டு மணிநேரத்தில் செய்ய வேண்டியிருக்கிறது. நினைத்தபோது எதிர்ப்பட்டவர்களிடம் நினைத்ததை பேசிவிட முடியாது.
சிந்தனையை கட்டுப்படுத்த வேண்டும் - எனக்கு கோபம் வருகிறது - நான் வருத்தப்படுகிறேன் - இப்போது அதற்கு நேரமில்லை என்று உணர்ந்து மாற்று வழிகளை கைக்கொள்ள வேண்டும். இது emotional management.
***
அடுத்ததாக,இந்நாட்களில் பெரிய குடும்பங்களில் கூட ஒருவருக்கொருவர் உட்கார்ந்து பேசுவது குறைந்து கொண்டு வருகிறது.
இந்நாளைக்கேற்ப சில உண்மை நிலைகளை சொல்லவேண்டும் - நாம் எல்லாவற்றையும் பேசித்தான் மற்றவர்கட்கு புலப்படுத்த வேண்டுமென்பதில்லை - பேசாமலேயே கூட உணர்த்தலாம்.
அதேபோல ஒரே வார்த்தை ஒவ்வொருவரால் ஒவ்வொரு மாதிரி பொருள் கொள்ளப்படுகிறது.அதுவும் முகத்தைப்பார்க்காமல் செல்போனில் பேசும்போது, நாம் சொல்வதற்கு சரியான பொருளை மற்றவர் புரிந்துகொண்டாரா என்பதை கவனிப்பது அவசியம்.
பேச்சை சரியாக புரிந்து கொள்வதில், கேட்பவருக்கு எந்த பொறுப்பும் இல்லை. அது சொல்பவரையே சாருகிறது. ஒரு விஷயம் சரியாக சென்றடைய வேண்டுமானால் முழுப்பொறுப்பும் அந்த விஷயத்தை சொல்பவருக்கே சேரும்.
***
முன்பே சொன்னது போல நாமெல்லாம் ஒருநாளில் பல மணிநேரத்துக்குரிய வேலையை சில மணிநேரத்தில் செய்ய வேண்டியிருக்கிறது. இதில் ஒன்று புரிந்து கொள்ள வேண்டும் - நேரத்தை வைத்து மட்டும் நாம் ஒருக்காலும் திட்டமிட்டு விட முடியாது.
நினைத்ததையெல்லாம் நினைத்தபடிக்கு நிறைவேற்றி வருவது நிச்சயமில்லை.
அதனால் எந்த வேலையையும் பிரித்து பகுத்து திட்டமிட்டு கொள்ளுதல், சில வேலைகளை வேறொருவர் மூலமாக நிறைவேற்றிக்கொள்ளுவது, நேரத்தைவிட வேலையை வழிநடத்திக்கொள்வது ஆகியவை தேவை.
உதாரணத்திற்கு இரவு எட்டு மணிக்கு ஒரு செய்தி கிடைக்கிறது என்றால் விடிந்ததும் மறுநாள் அதற்கான காரியத்தில் இறங்கலாம் என்று எண்ணுவதை விட உடனே செல்போனிலோ, ஈமெயிலிலோ தொலைத்தொடர்பு மூலமாக செயலை துவங்க முடியுமா என்று பார்க்க வேண்டும்.
Time-managementல் ஒரு புதிய கண்ணோட்டம் தேவை.
***
அடுத்து இந்நாளில் குடும்பத்தில் தலைமை யாரிடம்? அது பகிர்ந்தளிக்கப்பட்ட ஒன்றே தவிர - ஒருவரிடமே குடும்பத்தின் தலைமை பொறுப்பு மொத்தமும் இல்லை.
அலுவலகங்களிலேயே தலைமை பதவி என்பது பல நேரங்களில் சமரசப்படுத்தப் பட்டாகி விட்டது. In this company, there is no strict hierarchy, people can come forward, take initiatives, take the lead என்று ஒப்புக்கொள்ளப் படுகிறது - அதற்கான வாய்ப்புகளும் உருவாகின்றன.
“Go!” says the boss - “Lets go!” says the Leader என்பது உயர்ந்த தலைமைப் பண்புகளுக்கான உதாரணம்.
இந்நாளில் குடும்பங்களில் ஒருவருக்கொருவர் மரியாதை கொடுத்துப் பழகுதல் மிகவும் அவசியம். மரியாதை கொடுப்பதே தலைமைத்துவத்துக்கு முக்கிய கடமை.
நண்பர் ஒருவர் நாள் முழுவதும் உழைத்து விட்டு வீட்டுக்கு போனால் வீட்டில் யாரிடமும் பேசமாட்டார். அவர்களே பேசினாலும் பதில் வராது. ஆனால் வேறு நண்பர் யாராவது வந்தாலோ, தொலை பேசினாலோ, உடனே வள வள வென்று பேசுவார். இதனால் பெரும் ப்ரச்னைகள் எழுந்தன.
அடிப்படைக் காரணம், நமது மனைவிதானே, நமது பிள்ளைதானே என்று சிறு அலட்சியம். இது தவறு. மற்றவர்களை எப்படி நடத்துகிறோமோ அந்த மரியாதையை வீட்டிலிருப்பவர்களுக்கும் கொடுக்க வேண்டும்.
***
அடுத்து மிக முக்கியமானது stress management - மன உளைச்சலை சமாளித்தல். ஒவ்வொரு ப்ரச்னையின் போதும், ப்ரச்னை பண்ணுகிற ஆளையோ அதற்கு காரணமாகிவிட்டவர்களையோ ஓங்கி ஒரு குத்து குத்தி வீழ்த்தினால் ப்ரச்னை முடிந்து விடுமா? அல்லது அந்த இடத்திலேயே நிற்காமல் தலை
தெறிக்க ஓடினால்தான் ப்ரச்னை இல்லாமல் போய்விடுமா?
ஆகையால் இந்த மன உளைச்சலை சமாளிக்கும் திறமை மிகவும் அவசியம். இதை மூன்று வழிகளில் சமாளிக்கலாம் - (1) சிந்தனையின் மூலமாக - இந்த ப்ரச்னையில் நாம் மட்டுமே எதுவும் செய்ய
முடியாது - எல்லாமும் எப்போதும் நம் கட்டுப்பாட்டிலேயே இருக்காது என்று புரிந்து கொண்டு, ப்ரச்னையில் சம்பந்தப்பட்ட ஒவ்வொருவருக்கும் உள்ள கண்ணோட்டத்தை யோசித்துப் பார்க்க வேண்டும். நாம் செய்யக்கூடியது எதுவாயினும் அதன் விளைவுகளை யோசித்து திட்டமிட வேண்டும்
(2) செயல் மூலமாக - அவசரமாக (urgency) செய்ய வேண்டியது, மிகவும் முக்கியமாக (importance) செய்ய வேண்டியது, என்பவற்றை பகுத்தறிந்து என்ன செய்தால் அந்த மன உளைச்சல் குறையும் என்று தீர்மானித்து அதை செய்ய வேண்டும். மூச்சை இழுத்து விடுவது, ப்ராணாயாமம் போன்றவற்றை கைக்கொள்ளலாம்.
(3) ஒருகாரியம் நடந்து முடிந்து விட்டதெனில் இனி இந்த மன உளைச்சலை கடப்பது மட்டும்தான் மீதம் என்பதை உணர்ந்து நடந்து கொள்ள வேண்டும்.
***
அடுத்து மிகவும் சுவாரசியமான அன்றாடம் தேவைப்படக்கூடிய திறமை negotiating skills (சமரசம் செய்தல் - மொழிபெயர்ப்பு சரிதானா?) - பல பேரை சந்திக்க வேண்டிய சூழ்நிலையில், பல ப்ரச்னைகள்
தோன்றுகின்றன.
குடும்பத்துக்குள்ளேயே ஒரு conflict of interests - அதனால் பெற்றோருக்கும் குழந்தைகளுக்கும் ப்ரச்னை. அலுவலகத்தில் பொது இடங்களில் என்று எங்கே போனாலும் இந்த சமரசம் செய்யும் திறமை வியாபாரத்தில் பொருட்களை வாங்குவதைப்போல் தேவைப்படுகிறது.
சில பேர் தாம் நினைத்ததே முடிவு என்றிருப்பார்கள். சிலபேர் மிகவும் கீழிறங்கி நஷ்டப்படுவார்கள். இரண்டும் தவறு.
சமரசம் செய்வதில் முதல் நடவடிக்கை நம் எல்லையை உணர்வது - இரண்டாவது எதை விட்டுக்கொடுப்பது என்ற முடிவு. இதற்கு மேல் ஒரு முடிவு எடுத்தபின் மீண்டும் மீண்டும் அதையே பேசி குழப்பாமல் இருக்க வேண்டும்.
***
கடைசியாக social etiquette - மாறிவரும் சமூகப்பழக்க வழக்கங்கள் - உதாரணமாக இந்நாளில் நினைத்தபோது எத்தனை நெருங்கியவராயிருந்தாலும் போய் வீட்டில் சந்திக்க முடியாது.
முதலில் தொலைபேசியில் பேசி வரலாமா என்று தெரிந்து கொள்ளவேண்டும். போதுமான அளவு இருந்துவிட்டு கேட்டுக்கொண்டாலொழிய அதற்குமேல் ஓரிடத்தில் தங்கிவிடக்கூடாது. வழியில் பார்த்தாலும், பேசக்கூடிய சந்தர்ப்பம் தானா என்று உணர்ந்து பேச வேண்டும்.
மாறிவரும் காலத்தில் நான் சில உதாரணங்களை மட்டுமே எடுத்து இந்த முதற்பத்தியில் சொன்ன திறங்களையும் அதற்கான அவசியத்தையும் கொடுத்திருக்கிறேன். இன்னும் இப்படி எத்தனையோ இருக்கிறது.
Mm…. வாழ்க்கை ஒரு சவால்தான்!



Wonderful ! Wonderful ! Very good post !
//மாறிவரும் காலத்தில் நான் சில உதாரணங்களை மட்டுமே எடுத்து இந்த முதற்பத்தியில் சொன்ன திறங்களையும் அதற்கான அவசியத்தையும் கொடுத்திருக்கிறேன். இன்னும் இப்படி எத்தனையோ இருக்கிறது.//
Please continue this series !