கடைசி தேதி என்று ஒரு பூதம் இருக்கிறது என்று உணர்ந்திருக்கிறீர்களா.. இந்த பூதம் அடிக்கடி வந்து தொல்லை கொடுக்கும். போன் பில் ஆரம்பித்து, மின்சார கட்டணம், ஆயுள் காப்பீடு முதலான சேமிப்பு, கடன் அட்டை, வீட்டு கடன் என்று வரிசையாக ‘இன்று கடைசி’ என்று மாதம் முழுவதும் வந்து கொண்டே இருக்கும். காலையில் எழுந்தால் இன்று எதற்கு கடைசி தேதி என்று கேட்டுக்கொண்டு எழுந்திருக்க வேண்டியிருக்கும். அது ஏன் தினம் எதாவது ஒன்றுக்கு கடைசி தேதி என்று இருந்து கொண்டே இருக்கிறது?

இன்னும் சில வகைகளில் கொஞ்சம் கிரேஸ் பீரியட் கொடுப்பார்கள். பதினைந்து நாள் கிரேஸ் பீரியட் கொடுத்தாலும், அந்த பதினைந்தாவது நாள்தான் அதற்கு பணம் கட்ட நினைவே வரும். நான் மட்டும் தான் இப்படி இருக்கிறேனோ என்று சந்தேகம் அங்கே பணம் கட்டும் இடத்தில் நிற்கும் மைல் நீள க்யுவை பார்த்தால் போய் விடும் – அப்பாடா நாம் தனியாள் இல்லை என்று நினைத்துக்கொள்வது உண்டு. அப்படி அடித்து பிடித்து ஓடி க்யூவில் நின்றாலும் அதற்கு மேல் கொஞ்சம் அதிருஷ்டம் வேண்டும். பொதுவாக அரசாங்க வங்கிகள், அலுவலகங்களில் சில கறார் பேர்வழிகள் இருப்பார்கள் – ‘சார், 12:30 உடன் Counter மூடியாகி விட்டது’ என்று பட்டென்று பதில் சொல்வார்கள்.
சரி இனி இந்த தொல்லைக்கு ஒரு முழுக்கு – இனி முதல் வாரத்திலேயே – அல்லது நினைவூட்டல் கடிதம் (reminder advice notice) வந்தவுடனேயே கட்டி விடுவது என்று நினைத்தால், அதற்கு வாய்ப்பே இந்த கடைசி தேதி கொடுப்பதில்லை. E.B இலிருந்து இருபதாம் தேதி வந்து கணக்கு எடுத்துப்போனவுடனேயே மறுநாளே ஓடிப்போய் பணம் கட்டி விட்டு வீட்டுக்கு வந்தால், ‘அடப்பாவி, அதற்குள் என் அவசரப்பட்டாய்? E.B.க்கு அடுத்த மாதம் பதினைந்தான் தேதிதான் கடைசி நாள் – இன்னும் நிறைய நாள் இருக்கிறது – இன்று கடன் அட்டைக்கு கடைசி நாள் மறந்து விட்டாயா?’ என்று வீட்டில் நினைவூட்ட, நான் சற்றே விழிக்க, திடீரென்று என் செல் போனில் ஒரு SMS ” Dear Customer, Your vehicle no: TN10 XX007, has reached due date for the last free service. Please bring your vehicle today for servicing or you will miss your free service” – நான் மயங்கி விட்டேன் – யாராவது கடைசி தேதி தாண்டாத சோடா வாங்கி கொடுங்கப்பா…!

Last date illada ore visayam Blogla Post pannuradu taanungo….
Adanaala taan namma blog oda talaippu Writing Since Free.