Feast after death - short story
அக்டோபர் 7, 2007 ஆல் Srikanth
இறந்தபின் விருந்து - சிறுகதை
சட்டையை கழற்றுவது போல - உடம்பையும் சேர்த்து கழற்றியதாக உணர்ந்தேன். நாங்கள் இருந்த கிராமத்து தெருவில் இரவில் வயசாளிகள் கணப்பு போடுகிறேன் என்று தவிட்டில் நெருப்பு வைத்து புகை கிளப்புவார்கள். இப்போது அந்த புகை வாசனையும், அந்த புகையிலேயே நானும் கலந்து விட்டது போலவும் தோன்றியது.
எனக்கு விக்கலும் தாகமும் எடுப்பது போல இருந்தது. ஆனால் வாய் திறந்து கேட்க முடியவில்லை. எல்லோரும் அருகில் இருக்கிறார்கள் - எனக்குத்தான் அடையாளம் தெரியவில்லை. கொஞ்சம் குழப்பமாக இருக்கிறது.
கொஞ்ச நேரம் மனதில் எந்த எண்ணமும் வரவில்லை - அமைதியாக இருந்தது. திடீரென்று விழிப்பு வந்து மிதப்பது போல் உணர்ந்தேன். இப்போது கொஞ்சம் பயமும் வந்தது. ஐயோ.. எனக்கு என்னவோ ஆகிவிட்டது - யாராவது உதவி செய்யுங்களேன்!
பக்கத்து வீட்டில்தான் சித்த வைத்தியர் இருக்கிறார். அவரை விட்டால் அவசரத்துக்கு யாரும் கிடையாது. ஆனால் அவர் குழந்தை வைத்தியம் அல்லது தீராத வியாதி அந்த மாதிரி எல்லாம் பார்ப்பது கிடையாது. முக்கால்வாசி நேரம் நாடி பிடித்து பார்த்து “போய் அரை மணியாச்சு” என்று ஊர்ஜிதம் பண்ணுவதைத்தான் தொழிலாக கொண்டிருந்தார்.
ஐயோ.. அவரையாவது கூப்பிடுங்களேன்…
கொஞ்ச நேரம் என்ன நடந்ததென்று தெரியவில்லை.. எல்லாம் மசமசப்பாய் இருந்தது. திடீரென்று வென்னீர் தொட்டிக்குள் விழுந்ததுபோல் உணர்ந்தேன். உடம்பு இப்போது கனமாக இருந்தது. கண்ணை திறந்து பார்ப்பதே பாறைக்கல்லை தூக்குவது போல் கனமாக இருந்தது. ஆனாலும் விழித்தேன்.
அப்பாடா… சுற்றிலும் முகங்கள்.. முகங்கள்.. வைத்தியர் தெரிந்தார் - அவர் முகத்திலென்ன ஏமாற்றமா.. சந்தோஷமா தெரியவில்லை.
“ஐயோ எம்புள்ள.. செத்து பொழைச்சுட்டான்” என்றார்கள். எனக்கு மறுபடியும் விக்கலெடுக்க மணத்த தக்காளி வத்தலும் மோருமாய் வாந்தி எடுத்தேன். பிறகு தண்ணீர் குடித்து சிறிது நேரம் கழித்து தூங்கினேன்.
சில நாட்கள் கழித்துதான் தெரிந்தது, நான் இரண்டு நாள் மயங்கி இருந்திருக்கிறேன். முதல்நாள் வீட்டுக்கு தெரியாமல் சிறிது தூரத்தில் உள்ள பக்கத்து கிராமத்தில் என் நீச்சல் விளையாட்டு தோழனை பார்த்து விட்டு வரப்போய் அவன் வீட்டிலேயே சாப்பிட்டேன். நான் சாப்பிட்ட மோரில் மட்டும் ஏதோ விஷப்பூச்சி விழுந்துவிட அதுதான் நான் மயங்கி விழுந்ததற்கு காரணம்.
ஆனால் ஒன்று புரியவில்லை - அதற்குள் உள்ளூரில், செத்துப்போனால் யமலோகத்தில் மணத்த தக்காளியும் மோருமாக சாப்பாடு போட்டு விருந்து வைப்பார்கள் என்ற வதந்தி பரவிவிட்டதுதான் அது.


