மனசுக்குள் உட்கார்ந்து மணியடித்தாய் !
ஜூலை 31, 2007 ஆல் Srikanth
மனசுக்குள் உட்கார்ந்து மணியடித்தாய் - என்
மெளனத்தை விழியாலே மொழி பெயர்த்தாய் !
கனவுக்குள் நீ நின்று குரல் கொடுத்தாய் - என்
கவிதைக்கு உன் வார்த்தை வரம் கொடுத்தாய் !
கதவோரம் நீ வந்து மிகசிரித்தாய் - என்
கண்ணுக்குள் தூக்கத்தை சிறையெடுத்தாய் !
இதமாக என்னெஞ்சை கொளுத்திவிட்டாய் - அடி
எரியட்டும் ஏன் இன்று நிறுத்திவிட்டாய்… !
ஒடியாத கிளையென்று நினைத்திருந்தேன் - கிளி
உட்கார்ந்து போனவுடன் வளைந்து போனேன் !
வடியாத நதியென்று நினைத்திருந்தேன் - நீ
வந்தவுடன் உன்மடியில் வடிந்து போனேன் !
ஒரு கோடி மின்னல்கள் நெஞ்சுக்குள்ளே - தினம்
ஊர்வலங்கள் போகின்ற அனுபவங்கள் !
இருந்தாலும் இதுவொன்றும் இதமாயில்லை - அட
என்றாலும் மனம் சொல்லும் பரவாயில்லை… !
இறந்தகாலம் காதலுக்கு மட்டும் இல்லை - அது
இருந்தாலோ அதற்குப் பெயர் காதலில்லை !
பிறந்தபயன் காதலிலே பூர்த்தியாகும் - காதல்
பிழம்பாலே நம்கண்கள் ஜோதியாகும் !
வசந்தங்கள் புதுப்பிக்கும் மரத்தையெல்லம் - வரும்
வைகை நதி புதுப்பிக்கும் கரையை எல்லாம் !
நிஜத்தைத்தான் சொல்லுகிறேன் மாற்றமில்லை - காதல்
நெருப்பொன்றே புதுப்பிக்கும் மானுடத்தை… !
உன்னைநான் பார்த்தவுடன் நெஞ்சுக்குள்ளே - அடி
உட்சிறகு ஒருலட்சம் முளைக்கக் கண்டேன் !
விண்ணைப்போய் முட்டிவிடக் கூடாதென்றே - இன்று
விரிகின்ற சிறகுகளைச் சுருக்கிக் கொண்டேன் !
எங்கேநான் பறந்தாலும் என்ன பெண்ணே - தினம்
இளைப்பாற உன்மடிதான் எனக்கு வேண்டும் !
கங்கைநதி ஊரெல்லாம் திரிந்தாலென்ன? - அடி
கடலில்தான் அதுசென்று சேரவேண்டும்… !
சிரிப்பதற்கு மட்டும் அந்த உதடுபோலும் - பார்வை
சிந்திவிட மட்டும் அந்த கண்கள் போலும் !
எரிப்பதற்கு மட்டும் அந்த அழகு போலும் - ஆணை
இடுவதற்கு மட்டும் அந்த விரல்கள் போலும் !
கறுப்புகளை மறந்துவிட்டு எரிந்துநிற்கும் - ஒரு
கனகமணி விளக்கைப்போல் நமக்கும் தோழி
உறுப்புகளை மறந்துவிட்ட காதல் வேண்டும் - அது
உண்மையிலேயே சாத்தியமா முயன்று பார்ப்போம் !
- கவியரசு வைரமுத்து


