வானொலி நாட்கள்
ஜூலை 2, 2007 ஆல் Srikanth
சென்னை வானொலியிலும், அதன் பண்பலை வரிசையிலும் புதினப்பக்கங்கள் என்றொரு நிகழ்ச்சி வரும். இரவு ஒன்பது அல்லது பத்து மணிக்கு என்று நினைக்கிறேன். அதில் ஒருவர் மிருதுவான குரலில் புதினம்(Novel) ஒன்றை வாசிப்பார். பொதுவாக தில்லானா மோகனாம்பாள் போன்ற பிரபலமான நாவல்களை தினமும் அரை மணிநேரம் வாசிப்பார்.
தனிமையாக மொட்டை மாடியிலோ, வேலை முடிந்து வீடு திரும்பும்போதோ, வீட்டில் வேலை முடித்து வாசலில் நிலா வெளிச்சத்தில் உட்கார்ந்திருக்கும் போதோ இப்படி புதினங்களை கேட்பது மனதுக்கு நிறைவாக இருக்கும்.
எங்கள் பக்கங்களில் சிலோன் வானொலி நன்றாக கேட்கும். அதில் காலையிலும் மாலையிலும் சினிமா பாடல்கள் ஒலிபரப்புவார்கள். அதுவும் தூய தமிழில் பாடலுக்கேற்ற முன்னணி, பின்னணி விவரங்களை சேர்த்து சொல்லும்போது மிக நன்றாக இருக்கும்.
சில நேரம் shortwave பக்கம் போய் “மலேசிய வானொலிநிலையம் கோலாலம்பூர்” என்ற அறிவிப்பை கேட்டு துள்ளிய அனுபவம் உண்டு. மேலும் இந்திய அரசாங்கத்தின் கிழக்காசிய ஒலிபரப்பு போன்ற குறிப்பிட்ட நேர ஒலிபரப்புகளும் கேட்பதுண்டு. 
சில சமயம் FMல் ஏதாவது ஸ்டேஷன் கிடைக்காதா என்று எங்கள் பெரிய Bush ரேடியோவில் தேடிக்கொண்டிருக்கும் போது, போலீஸ் வயர்லஸ் கூட கேட்க கிடைத்ததுண்டு. எங்கள் ஊரில் ரேடியோ ரிப்பேர்(!) செய்யும் கடை மட்டும் ஏழெட்டு இருக்கும். ரேடியோ கெட்டு போய்விட்டால் நடையாக நடந்து ரிப்பேர் செய்து வந்ததுண்டு.
வானொலி கேட்டு வளர்ந்தது ஒரு பசுமையான திரும்ப கிடைக்காத அனுபவம்!!



நானும் புதினப்பக்கங்கள் கேட்டதுண்டு ஆனால் இப்போது எதுவும் நினைவிலில்லை.
ஆனால் கல்கியின் தியாக பூமி நாடகாமாக கேட்டது இன்னும் நினைவிருக்கிறது.
சிலோன், சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, பிலிப்பைன்ஸ், சீனா என்று SW ல் எல்லா தமிழ் வானொலிகளையும் விடாது கேட்டவன் நான்
வலைப்பதிவில் தேடினால் இது போல பல வானொலிப் பிரியர்கள் கிடைப்பார்கள்