தமிழ் நாவல் புத்தகங்கள்
ஜூன் 12, 2007 ஆல் Srikanth

எப்போதும் இல்லாத அளவுக்கு ஒரு பத்து பதினைந்தாண்டுகளுக்கு முன் தமிழகத்தில் புற்றீசல் போல அவ்வளவு நாவல் புத்தகங்கள் வெளிவந்தன. இப்போது பலதும் காணாமல் போய்விட்டன.
பாக்கெட் நாவல் என்று வெறும் ஷர்ட் பாக்கெட் சைசில் வந்தது ஒருவிதமான புரட்சிதான். படித்துவிட்டு தூக்கியெறிந்து விடலாம் என்ற மட்டிலேயே அந்தவிதமான நாவல்கள் வெளிவந்தன. இது பலதரப்பட்ட மக்களாலும் வரவேற்கப்பட்டதால்தான் இப்படி ஒரு புற்றீசல் போல ஏகப்பட்ட நாவல் புத்தகங்கள் வெளிவர ஆரம்பித்தன.
தொடர்கதை என்பது பல சமயங்களில் ஒரு வருடத்திற்குமேல் வெளிவரும். அதனால் அதை திரட்டி புத்தகமாக-நாவலாக படிக்கும்போது பலதும் விடுபட்டதுபோலவும் தொடர்பில்லாமலும் இருப்பதாகப் படும் - இதற்கு சாண்டில்யன் போன்ற பெரும் எழுத்தாளர்களே விதிவிலக்கல்ல.
ஆனால் மாத நாவல் எழுத்தாளர்கள் எப்படித்தான் தொடர்ந்து மாதாமாதம் புதிது புதிதாக கதையில் தொய்வின்றி எழுதுகிறார்களோ என்று ஆச்சரியப்படாமல் இருக்க முடியாது.
நான் ரசித்து படித்த மாத நாவல்கள் ராஜேஷ்குமார், சுபா, ராஜேந்திரகுமார், பட்டுக்கோட்டை பிரபாகர் போன்ற எழுத்தாளர்கள் எழுதியவை. இதுதவிர தேவன், கோட்டயம் புஷ்பநாத் என்று பலதும் படிப்பதுண்டு. (எழுத்துலகின் பிதாமகர் சுஜாதாவை தனியாக எழுதிக்கொள்ளலாம் என்று இங்கே அதில் இறங்கவில்லை).
இணையத்தில் நாவல் எந்த வடிவம் பெறும் என்று தெரியவில்லை. பாரம்பரிய முறையில் பக்கம் பக்கமாக எழுதித்தள்ளுவது படிப்பவர்களுக்கு ஈர்ப்பாக இருக்குமா என்று சந்தேகமாக இருக்கிறது.
See also:
http://www.chennaionline.com/society/novels.asp


